பொறியாளன் படத்தால் ஓரளவு தெரிந்த நபரான ஹரிஷ் கல்யாண், பிக்பாஸ் மூலம் பிரபலமானார். தற்போது, தாராளபிரபு, கசடதபற, ஓ மணப்பெண்ணே படங்கள் மூலம் கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடிக்கவும் தக்கவைக்கவும் முயன்று வரும் ஹரீஷ் கல்யாண் அளித்த பேட்டி:
ஓ மணப்பெண்ணே எந்த மாதிரி படம்... திருப்தியாக இருந்ததா?
ரொம்ப யதார்த்தமான படம். தெலுங்கில்வெளியான பெல்லி சூப்புலு படத்தின் ரீமேக் இது. முகம் சுளிக்காமல் பார்க்கும்வகையில், நேர்மையான ரீமேக்காக எடுத்துள்ளோம்.
மக்களிடம் ஹரீஷ் கல்யாண் எந்த மாதிரி அடையாளப்பட விரும்புகிறீர்கள்?
நிஜ வாழ்க்கையில் இருப்பதை கதையில் பார்க்கும் போது, அது உடனே கனெக்ட் ஆகிவிடும். ஓ மணப்பெண்ணே படத்தின் நாயகனை போலவே நானும் நிஜத்தில் இருந்துள்ளேன். மக்களுடன் இணைக்கும் விதமான பாத்திரங்களில் அதிகம் நடிக்க வேண்டும். நம்ப பையன் பா இவன்... என மக்கள் சொல்ல வேண்டும்.
உங்களுடன் நடித்த ப்ரியா பவானிசங்கர் 18 படங்களில் பிசியாக நடிக்கும் போது, பிக்பாஸ் வீட்டுக்கு போய் வந்த பின்னும் உங்களுக்கு அந்த மாதிரி பட வாய்ப்புகள் வராதது குறித்து யோசித்தது உண்டா?அப்படியெல்லாம் இல்லை. போதிய படவாய்ப்பு வருகிறது. கதையையும், பட்ஜெட்டையும் பார்த்தே தேர்வு செய்கிறேன். எண்ணிக்கை முக்கியமல்ல; குவாலிட்டி தான் முக்கியம். நாயகியாக நடிப்பவர்கள் நிறைய படங்களில் நடிக்கலாம். நான், நான்கு படத்தில் நடித்து, அதில், மூன்று படம் தோல்வியடைந்து விட்டால், அடுத்த படத்தில் அனைவருக்குமே பயம் இருக்கும். அதனால் பொறுமையாகவே பார்த்து நடிக்கிறேன்.
பொறியாளன் படத்தில் நடித்த ஹரீஷுக்கும், தாராளபிரபு படத்தில் நடித்த ஹரீஷுக்கும் உள்ள வித்தியாசம்?ரொம்பவே கற்றுக் கொண்டுள்ளேன். குறிப்பாக சினிமா நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு படத்திலும், எந்த பாத்திரம் நடித்தாலும், அதில் கற்றுக் கொண்டவனாக, என்னை நானே பார்க்கிறேன்.
சமீபத்தில் வெளிவந்த, தாராளபிரபு, கசடதபற, ஓ மணப்பெண்ணே படங்களில் ஒரே மாதிரி இருக்கிறீர்களே ஏன்?அந்த மாதிரி எனக்கு தெரியவில்லை. மூன்றுமே வெவ்வேறு படங்களே. கசடதபற படம் இதுவரை நான் நடிக்காத பாத்திரம்.
ரிஸ்க் எடுப்பது ஹரீஷுக்கு பிடிக்குமா?கண்டிப்பாக பிடிக்கும். பேலன்ஸான ரிஸ்க் எடுப்பதையே விரும்புகிறேன். அதை தான் செய்து கொண்டிருக்கிறேன்.
கோவில் கட்டினால், நீங்கள் யாருக்கு கட்டுவீர்கள்?கண்டிப்பாக, என் அம்மாவுக்கு தான்; இல்லையென்றால் கடவுளுக்கு. என்னை பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.
சமூகத்தில் ஹரீஷுக்கு உள்ள அக்கறை என்ன?நிறையவே இருக்கு. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நாம் கற்ற நான்கு நல்ல விஷயங்களை மற்றவர்களுக்கும் தர நினைக்கிறேன். அதை தொடர்ந்து செய்து செய்கிறேன்.
அரசியல் ஆர்வம் எப்படி?சார்...! அதெல்லாம் எனக்கு என்னவென்றே தெரியாது. அது நம்ம ஸ்டேஷனே இல்லை. அதைப்பற்றி யோசித்ததும் இல்லை.
- நமது நிருபர் --