ரஜினிக்கு என்ன பாதிப்பு?
ADDED : 1452 days ago
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்(71) நேற்றிரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு என்ன மாதிரியான பிரச்னை என்பதை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நடிகர் ரஜினியின் திரையுலக சேவையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான, தாதா சாஹேப் பால்கே விருதை அறிவித்தது. கடந்த 25ம் தேதி டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கையால் விருது பெற்றுக் கொண்டார் ரஜினி. நேற்று முன்தினம் சென்னை திரும்பிய அவர் தனது பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் உடன் அண்ணாத்த படத்தை பார்த்தார். ‛‛அண்ணாத்த படத்தை தன்னை விட தனது பேரன் வேத் மிகவும் ரசித்ததாக ரஜினி நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு 8:30 மணி அளவில் திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இத்தகவல், ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நலமுடன் உள்ளார். இன்று வீடு திரும்புவார் என, அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இப்போது ரஜினிக்கு என்ன பிரச்னை என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும். ரத்த குழாயில் அடைப்பு, ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்தகுழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை ஆகியவற்றை இது குறிக்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே சிகிச்சைப் பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு நேற்று இரவு இதுதொடர்பான சிகிச்சை தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் ரஜினியின் உடல்நிலை பாதிப்பில் கவலை கொள்ள எதுவுமில்லை. இன்றோ அல்லது நாளையோ வீடு திரும்புவார் என தெரிகிறது.
ஆரோக்கியமாக உள்ளார்
மருத்துவமனையில் உள்ள நடிகர் ரஜினியை அவரது உறவினரும், நடிகருமான ஒய்ஜி.மகேந்திரன் சென்று பார்த்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛ரஜினியின் உடல்நிலை ஆரோக்கியமாக உள்ளது. அண்ணாத்த படம் பார்க்க நிச்சயம் தியேட்டருக்கு வருவார் என்றார்.