ரஜினி உடல்நலம்; மருத்துவமனைக்கே சென்று முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பு
ADDED : 1437 days ago
நடிகர் ரஜினிகாந்திற்கு கடந்த 28-ம் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் நலமுடன் உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் என ரஜினியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே ரஜினியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‛தலைசுற்றல் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு கரோடிட் அர்ட்டரி ரீவேஸ்குலரைசேஷன் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைக்கு பிறகு ரஜினி உடல்நலம் தேறி வருவதாகவும், சிகிச்சை முடிந்து இன்னும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று (அக்.,31) காவேரி மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அங்கு 5வது தளத்தில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்தும், சிகிச்சை விவரங்களையும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.