உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மோசடி வழக்கில் தொடர்பு : ஜாக்குலின் இரண்டாவது நாளாக ஆஜர்

மோசடி வழக்கில் தொடர்பு : ஜாக்குலின் இரண்டாவது நாளாக ஆஜர்

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை ஜாக்குலின் மறுத்தார். ஆனால் அவர் சுகேசுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. அதோடு சுகேஷ் சிறைக்குள் இருந்து கொண்டே 200 கோடி வரை மோசடி செய்த விவகாரத்தில் ஜாக்குலினுக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அதனால் நேரில் ஆஜராகும்படி ஜாக்குலினுக்கு அமலாக்கத்துறை சம்மனும் அனுப்பியது. துபாய் செல்ல முயன்ற அவரை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த நிலையில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் டில்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகருடனான தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு பதிவு செய்தனர். இந்த விசாரணை 8 மணி நேரம் நடந்தது.

பல கேள்விகளுக்கு அவரால் தெளிவான பதில் சொல்ல முடியவில்லை. வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து பதில் சொல்வதாக கூறியிருக்கிறார். இதனால் அவருக்கு ஒரு நாள் அவகாசம் அளித்தது.

இதை தொடர்ந்து நேற்றும் அவர் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை முன் ஆஜரானார். அப்போது அவர் சுகேஷ் எனது நண்பர்தான். சில கொடுக்கல், வாங்கல்களில் அவருக்கு நான் உதவியது உண்மை. ஆனால் அவை நேர்மையான வரவு, செலவுகள் என்றும், சுகேஷ் நேர்மையானவர் என்று நம்பியும் அதை செய்ததாக அவர் விசாரணையில் கூறியிருப்பதாக அமலாக்கத்துறையில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. இந்த வழக்கில் ஜாக்குலின் சாட்சி மட்டும்தான், சாட்சிக்குரிய கடமையை அவர் செய்தார் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !