2021 டுவிட்டர் சாதனை - நம்பர் 1 இடத்தில் விஜய்
சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு தளமாக டுவிட்டர் இருக்கிறது. டிரெண்டிங், ரீ-டுவீட், லைக்ஸ் என டுவிட்டர் தளத்தில் தங்களது பதிவுகள் எந்த அளவிற்கு இருக்கிறது என சினிமா பிரபலங்கள் ஆசையோடு பார்ப்பார்கள். அதே போல ரசிகர்களும் தங்களது அபிமான நடிகர்களின் படங்களைப் பற்றிய டுவீட்டுகள் மற்ற நடிகர்களின் படங்களை விட சாதனை படைக்கிறதா என ஆவலோடு பார்ப்பார்கள்.
2021ம் ஆண்டில் இந்திய அளவில் டுவிட்டரில் சாதனை படைத்த விஷயங்களை டுவிட்டர் இந்தியா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அந்த விதத்தில் பொழுதுபோக்குத் துறையில் தமிழ் சினிமா உலகம் தான் டுவிட்டரில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
நடிகர் விஜய்யின் டுவிட்டர் தளத்தில் இருந்து வெளியான 'பீஸ்ட்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் அதிகமாக ரீ-டுவீட் செய்யப்பட்ட டுவீட்டாக இருக்கிறது. மேலும் இந்த டுவீட்தான் அதிகமாக லைக் செய்யப்பட்ட டுவீட்டாகவும் இருக்கிறது.
2021ல் அதிகமாக பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளில் 'மாஸ்டர்' படத்தின் ஹேஷ்டேக் 8வது இடத்தைப் பிடித்துள்ளது. 'வலிமை' இரண்டாவது இடத்தையும், 'பீஸ்ட்' மூன்றாவது இடத்தையும், 'ஜெய் பீம்' நான்காவது இடத்தையும், 'வக்கீல் சாப்' ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இதன் மூலம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலும் டுவிட்டர் தளத்தைப் பொறுத்தவரை விஜய்யும், அவரது படங்களைப் பற்றிய பதிவும் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளன.