வசூல் சாதனை படைத்த டாப் 5 இந்தியப் படங்கள்
2021ம் ஆண்டும் கொரோனா தொற்றால் இந்தியத் திரையுலகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் பல மாநிலங்களிலும் தியேட்டர்கள் மூடப்பட்டன. இருப்பினும் சில படங்களின் வெற்றி கொரோனா தொற்றையும் மீறி இந்தியத் திரையுலகத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.
இந்த 2021ம் ஆண்டில் இரண்டு தமிழ்ப் படங்கள் உட்பட ஐந்து இந்தியப் படங்கள் உலக அளவில் சாதனை புரிந்துள்ளன. ரோகித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய்குமார் நடித்த 'சூர்யவன்ஷி' ஹிந்திப் படம் சுமார் 300 கோடி வரை வசூலித்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படம் 240 கோடி வசூலித்து இரண்டாம் இடத்தைப் பிடித்து ஆச்சரியப்படுத்தி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்த 'மாஸ்டர்' படம் 230 கோடி வசூலித்து 3ம் இடத்தையும், வேணு ஸ்ரீராம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த 'வக்கீல் சாப்' தெலுங்குப் படம் 140 கோடி வசூலித்து 4ம் இடத்தையும், பொயப்பட்டி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்த 'அகான்டா' படம் 100 கோடி வசூலைக் கடந்து 5ம் இடத்தையும் பிடித்துள்ளன.
இந்திய அளவில் வசூலில் டாப் 5 இடங்களில் முதலிடத்தைத் தவிர அடுத்த நான்கு இடத்தையும் தென்னிந்தியப் படங்கள் பிடித்திருப்பது சிறப்பான ஒன்று.
வரும் வாரங்களில் மேலும் சில தென்னிந்தியப் படங்கள் பான் - இந்தியா படமாக வெளிவர உள்ளது. இனி வரும் காலங்களில் ஹிந்திப் படங்களின் வசூல் சாதனையையும் தொடர்ந்து தென்னிந்தியப் படங்கள் முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம்.