உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றி பெற்ற பிறகு மாறக்கூடாது : சிம்புவுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அட்வைஸ்

வெற்றி பெற்ற பிறகு மாறக்கூடாது : சிம்புவுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அட்வைஸ்

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவம்பர் 25ம் தேதி வெளியானது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தபோதும் படம் வணிக ரீதியாக திருப்தியான படமாக அமைந்தது.

இதை தொடர்ந்து இதன் வெற்றி விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதாவது: சிம்புவுக்கு நீண்ட நாள் கழித்து அவரை மேலே தூக்கிக் கொண்டு வந்துள்ள படமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதேபோல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்துவிட்டது.

சிம்புவுக்கு இந்த படம் நிச்சயமாக ஒரு திருப்புமுனை படம் தான். சிம்புவை நம்பி சுரேஷ் காமாட்சி மிகப்பெரிய முதலீடு செய்து இந்த படத்தை தயாரித்துள்ளார். இவ்வளவு பெரிய வெற்றி பெற்ற இந்தப்படத்தின் நாயகன் சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அவர் ஏதோ படப்பிடிப்பில் இருக்கிறார் என்று சொன்னார்கள். ஆனாலும் இந்த விழாவில் அவர் நிச்சயமாக கலந்து கொண்டிருக்க வேண்டும்.

வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வெற்றி கிடைத்ததும் உடனே மாறிவிடக்கூடாது.இந்தப் படம் அவருக்கு ஒரு பெரிய திருப்பம். இந்த மகிழ்ச்சியை நம்மோடு அவர் இங்கு வந்து கொண்டாடியிருக்க வேண்டும். ஒரு வெற்றியைக் கொண்டாட அந்த கதாநாயகன் இங்கே இருக்க வேண்டும். படப்பிடிப்பின்போது எப்படி இருந்தோமோ வெற்றிக்குப் பின்பும் அப்படியே இருக்க வேண்டும். அப்போது தான் இன்னொரு வெற்றி கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !