உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: 'ஊர்வசி' விருது வென்ற முதல் தென்னிந்திய நாயகியைத் தந்த “துலாபாரம்”

பிளாஷ்பேக்: 'ஊர்வசி' விருது வென்ற முதல் தென்னிந்திய நாயகியைத் தந்த “துலாபாரம்”


வேதனை ஒன்றை மட்டுமே பதிவு செய்து, பெரும் சாதனை படைக்க இயலும் என இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்கச் செய்து, புரட்சியை உண்டு பண்ணிய ஒரு அரிய கலைப் படைப்பாக வந்த திரைப்படம்தான் “துலாபாரம்”. படம் பார்ப்போரின் இதயங்களை ரணமாக்கி, கண்களை ஈரமாக்கும் இத்திரைப்படம், முதலில் வெளியானது மலையாள மொழியில்தான். 1968ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தினை இயக்கியவர், அன்றைய தென்னிந்தியத் திரையுலகின் முதன்மை ஒளிப்பதிவாளராக இருந்த ஏ வின்சென்ட்.

இயக்குநர் ஸ்ரீதரின் முதல் திரைப்படமான “கல்யாண பரிசு” திரைப்படத்திலிருந்து “காதலிக்க நேரமில்லை” திரைப்படம் வரை அவரது கண்களாகவே இருந்து, காட்சிகளை கவித்துவமாக்கித் தந்த ஒரு கலைநயமிக்க ஒளிப்பதிவாளரான இவரது இயக்கத்தில் வெளிவந்த இந்த “துலாபாரம்” திரைப்படத்தில் நடித்ததற்காகத்தான் நடிகை சாரதாவிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி, 'ஊர்வசி' சாரதா என அழைக்கப்பட்டார்.

தொழில்நுட்ப தரத்தோடு கூடிய ஒரு சிறந்த கதைக்களத்தில் பயணிக்கும் ஒரு திரைக்கலைஞர், தனது திறமையான நடிப்பாற்றலை வெளிக் கொணர்ந்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த தேசிய விருதினை, மலையாளத் திரையுலகில், அறிமுகமான மூன்றாவது ஆண்டிலேயே அவ்விருதினைப் பெறத் தகுதியான ஒரு திரைக் கலைஞராக நடிகை சாரதாவை அடையாளம் காட்டிய திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் இந்த “துலாபாரம்”. தோப்பில் பாஸ்கரபிள்ளையின் மலையாள நாடகமான இக்கதையை, மலையாளத்தைப் போலவே தமிழிலும் அதே பெயரில் திரைப்படமாக தயாரித்து வெளியிட்டனர். 1969ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் பதிப்பான இத்திரைப்படத்தினை தயாரித்தவர் இயக்குநர் டி ஆர் ராமண்ணா. தமிழ் பதிப்பை இயக்கியிருந்ததும் இயக்குநர் வின்சென்ட்டே.

வயலார் ரவி எழுதியிருந்த மலையாளப் பாடல் வரிகளுக்கு தமிழ் வடிவம் தந்திருந்தார் கவியரசர் கண்ணதாசன். “வாடி தோழி கதாநாயகி”, “பூஞ்சிட்டுக் கண்ணங்கள் பொன்மணி தீபங்கள்”, “காற்றினிலே பெரும் காற்றினிலே” என ஜி தேவராஜனின் இசையமைப்பில், படத்தின் அனைத்துப் பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. கதை, காட்சி அமைப்பு, பாத்திரப் படைப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, பாடல் வரிகள், படத்தில் நடித்திருந்த திரைக்கலைஞர்களின் பங்களிப்பு என அனைத்தும் குறைவின்றி நிறைவாய் இருந்த இத்திரைப்படத்தின் ஒப்பனையாளரின் பங்களிப்பும் அளப்பரியதாகவே இருந்தது. கல்லூரி மாணவி, ஒரு ஏழை தொழிலாளியின் மனைவி, அதன் பின் கணவனை இழந்து, மூன்று குழந்தைகளுடன் வறுமையில் வாடும் ஒரு ஏழைத் தாய் என்ற இந்த மூன்று நிலைகளிலும் நடிகை சாரதாவை காட்சிப்படுத்தியிருந்ததை பார்க்கும் போதே தெரியும் படத்தின் ஒப்பனையாளரின் பங்கு எத்தகையது என்று.

இத்தனை சிறப்புகளை உள்ளடக்கிய இத்திரைப்படத்தில் நடிகை சாரதா, தான் ஏற்று நடித்திருந்த 'விஜயா' என்ற அந்த கதாபாத்திரத்திற்காக அவர் தந்த பங்களிப்பும், அவர் காட்டிய அற்பணிப்பு உள்ளமும்தான் அவருக்கு தேசிய விருது என்ற ஆகச் சிறந்த விருதினைப் பெறுவதற்கு அவரை தகுதி படைத்தவராகவும், தேசிய விருதினைப் பெற்ற முதல் தென்னிந்திய நடிகை என்ற பெருமைக்குரியவராகவும் கொண்டு சென்றதோடு, “ஊர்வசி” சாரதா என இந்த உலகுக்கே அடையாளமும் காட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !