'மங்காத்தா' முன் நிற்க முடியவில்லை: 'திரெளபதி 2' இயக்குனர் வருத்தம்
மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ள படம் 'திரெளபதி 2'. பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடுவதாக அறிவித்து, பின்னர் ஜன.23க்கு தள்ளிவைத்தனர். அதன்படி, ஜனவரி 23ம் தேதி வெளியான இப்படத்திற்கு போதிய வரவேற்பு இல்லை. அதே நாளில் நடிகர் அஜித்குமாரின் 50வது படமான 'மங்காத்தா' ரீ ரிலீஸ் ஆனதால், அப்படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. இதனால், 'திரெளபதி 2' படத்தை விட, 'மங்காத்தா' படத்திற்கான டிக்கெட் புக்கிங் அதிகமானது.
இந்த நிலையில் திரெளபதி 2 படத்தின் இயக்குனர் மோகன் ஜி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''திரௌபதி - 2 திரைப்படத்திற்கு மக்களிடம் நல்ல கருத்து இருந்தும், மங்காத்தா திரைப்பட வெளியீட்டால் அதற்கு முன் நிற்க முடியவில்லை. பொங்கல் அன்று திரையரங்க பற்றாக்குறையால், வராமல் அடுத்த வாரம் தள்ளி வந்தது மிகப்பெரிய தவறு. மக்களிடம் திரைப்படம் ஜனவரி 23ல் வெளியாகிறது என்ற செய்தியைக் கொண்டு சேர்க்க முடியவில்லை. மங்காத்தா திரைப்பட கூட்டத்தால், எங்கள் திரைப்படத்தின் ஆடியன்ஸ் கருத்து பதிவு செய்ய முடியவில்லை.
மக்களிடம் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை கொண்டு சேர்க்க முடியவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி, பலர் என் மீது தப்பான கருத்தை பதிவு செய்தும், படம் பார்க்காமல் தவறான கருத்துக்களையும் பரப்பி வருகிறார்கள். திரைப்பட துறையில் எந்த பலமும் இல்லாமல் தனியாக இந்த 10 வருடங்களைக் கடந்து வந்துள்ளேன். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. எனக்கு மக்களே துணை.. மக்களே முடிவு செய்யட்டும்.. என்றும் உங்களை மட்டுமே நம்பி இருக்கும் உங்கள் மோகன் ஜி” எனப் பதிவிட்டுள்ளார்.