எங்கள் கூட்டணி ரசிகர்களுக்கு பிடித்துள்ளது : விஜய் 66 பற்றி யோகி பாபு
ADDED : 1250 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. இடையில் கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 66வது படத்தில் யோகி பாபு இணைந்துள்ளார். இதுப்பற்றிய அறிவிப்பு நேற்று வெளியானது. ஏற்கனவே விஜய் உடன் வேலாயுதம், மெர்சல், பிகில், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
விஜய் 66 படத்தில் நடிப்பது பற்றி யோகி பாபு நம்மிடம் கூறும்போது, ‛‛விஜய் உடன் எனக்கு இது 8வது படம். பெரிய ஸ்டார், தொடர்ந்து அவருடன் நடிக்கும் வாய்ப்பு வருகிறது. அதற்கு இயக்குனர்களும், நடிகர்களும் தான் காரணம். நானும் சில விஷயங்களை அவர்கள் பக்கம் சரியாக செய்கிறேன் என நினைக்கிறேன். எங்களின் கூட்டணியும் மக்களுக்கும் பிடித்திருக்கிறது. மக்களின் கைத்தட்டல் தான் திரும்ப திரும்ப அவருடன் எனக்கு நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. ஓரிரு காட்சி என்றாலும் அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. பீஸ்ட் படத்தில் அவருடன் பயணிக்கும் மாதிரியே காட்சி இருந்தது. ஆனால் படத்திற்காக சில காட்சிகளை எடுத்துவிட்டனர். இருந்தாலும் அடுத்தடுத்து அவருடன் நடிப்பது மகிழ்ச்சி. ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. நேற்று முதல் நானும் கலந்து கொண்டு நடித்து வருகிறேன்'' என்றார்.