விஜய், அஜித் படங்களை இயக்க தயார்: பார்த்திபன்
பார்த்திபன் தயாரித்து, நடித்து, இயக்கி உள்ள படம் ‛இரவின் நிழல்'. இது ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் வெளியாகிறது. பார்த்திபனுடன் வரலட்சுமி, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். எஸ்.தாணு வெளியிடுகிறார்.
இந்த படம் குறித்து பார்த்திபன் பேட்டி அளித்தார். அது வருமாறு: 'ஒத்தசெருப்பு சைஸ் 7' படத்தில் நான் மட்டும் நடித்தேன். தேசிய விருது உள்பட பல விருதுகள் கிடைத்தது. இதே படத்தை அபிஷேக் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்து இயக்கி வருகிறேன். அடுத்து இப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் ஆகிறது. ஜூலை 15ம் தேதி 'இரவின் நிழல்' படம் திரைக்கு வருகிறது. கேன்ஸ் திரைப்பட விழாவில் 'இரவின் நிழல்' திரையிடப்பட்டபோது, பல ஹாலிவுட் கலைஞர்கள் பார்த்து பாராட்டினார்கள். இதனால் இந்த படமும் ஹாலிவுட்டில் ரீமேக் ஆக வாய்ப்பிருக்கிறது.
சில வருடங்கள் உதவி இயக்குனராக இருந்தவர்களே விஜய், அஜித் படம் இயக்கும்போது நீங்கள் ஏன் இயக்கவில்லை என்று கேட்கிறார்கள். தவறு என் மீது தான் நான் அவர்களிடம் சென்று வாய்ப்பு கேட்பதில்லை. விஜய், அஜித் என் இயக்கத்தில் நடிக்க தயாராக இருந்தால் ஒவ்வொருவருக்கும் 5 கதைகள் சொல்வேன். அதில் அவர்களுக்கு பிடித்த கதையில் நடிக்கலாம். ஷங்கர் இயக்கிய 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கை நான் தான் முதலில் இயக்குவதாக இருந்தேன். சில காரணங்களால் அது நடக்கவில்லை. இனி வரும் காலங்களில் நடக்கலாம். என்றார்.