மீரா மிதுனை கண்டுபிடிக்க முடியவில்லை: கோர்ட்டில் போலீஸ் தகவல்
ஒரு சில படங்களில் சிறிய கேரக்டரில் நடித்தவர் மீரா மிதுன். சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக பேசி அதன் மூலம் பிரபலமானார். இந்த நிலையில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து, அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இது குறித்து சென்னை மத்திய குற்றவியல் பிறவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. தற்போது ஜாமீனில் விடுதலையாகி இருக்கும் மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று இரண்டு முறை நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனால் கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார் மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்தவில்லை. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “மீரா மிதுன் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரது செல்போன், சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரை தொடர்ந்து தேடி வருகிறோம்” என்றார்.
இதை தொடர்ந்து வழக்கை அடுத்த மாதம் 16ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதமன்றம் உத்தரவிட்டது.