உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத்

விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத்


தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் நடிகர்களாவதும், நடிகர்கள் இயக்குனர்களாவதும், அவர்களில் சிலர் தயாரிப்பாளர்கள் ஆவதும் வழக்கமாக நடந்து வரும் ஒன்று.

இசையமைப்பாளர்களாக இருப்பவர்கள் ஒரு சில படங்களில் சிறப்புத் தோற்றங்களில் நடித்திருப்பார்கள். அந்தக் காலத்தில் முன்னணி இசையமைப்பாளராக பல சூப்பர் ஹிட்களைக் கொடுத்த எம்எஸ் விஸ்வநாதன், 1998ல் அஜித்குமார் நடித்து வெளிவந்த 'காதல் மன்னன்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகராக அறிமுகமானார். அதன்பின் 'காதலா காதலா, ரோஜாவனம், தில்லு முல்லு (2013)' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இசையமைப்பாளராக அறிமுகமாகி வளர்ந்து வரும் நேரத்தில் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் ஆகியோர் நடிகராக, கதாநாயகர்களாக அறிமுகமானார்கள். விஜய் ஆண்டனி 2012ல் வெளிவந்த 'நான்' படம் மூலமும், ஜிவி பிரகாஷ் 2015ல் வெளிவந்த 'டார்லிங்' படம் மூலமும் கதாநாயகர்களாக அறிமுகமாகி இப்போதும் நடித்து வருகிறார்கள்.

அவர்களது வரிசையில் தற்போது கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் இணைந்துள்ளார்கள். பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் அந்தக் காலத்தில் பல ஹிட் படங்களைக் கொடுத்திருந்தாலும் நடிப்புப் பக்கம் வரவில்லை. சில படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். தற்போது 'லெனின் பாண்டியன்' என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

சென்னையில் வளர்ந்த இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கும், தமிழிலும் சில சூப்பர் ஹிட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே அவர் சினிமாவில் நடிக்கவும் வருவார் என்று சொல்லப்பட்டது. தற்போது 'எல்லம்மா' என்ற படத்தில் கதாநாயானாக அறிமுகமாக உள்ளார். அப்படத்தின் அறிவிப்பு வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.

ஒரே சமயத்தில் இசை, நடிப்பு என பயணிப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும், விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் ஆகியோர் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக பயணித்து வருகிறார்கள். அவர்களைத்தான் தேவிஸ்ரீ பிரசாத் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !