பழநி முருகனை அடுத்தடுத்து தரிசனம் செய்த திரைபிரபலங்கள்
அறுபடை வீடுகளில் ஒன்றான பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கோயிலுக்கு எப்போதுமே மக்கள் கூட்டம் அதிகம் வந்து செல்வார்கள். இப்போது கும்பாபிஷேகத்திற்கு பின் திரைப்பிரபலங்கள் பலரும் இந்த கோயிலுக்கு சென்று வர துவங்கி உள்ளனர். சில தினங்களுக்கு முன் மதுரை வந்த நடிகர் பிரபு அப்படியே பழநி சென்று முருகனை தரிசனம் செய்தார்.
நடிகை சமந்தா நேற்று பழநிக்கு சென்று வழிபாடு செய்தார். யானை பாதை வழியாக நடந்து சென்று கோயிலின் ஒவ்வொரு படிகளிலும் சூடம் ஏற்றி பின்னர் முருகனை தரிசித்தார். சமீபத்தில் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளார் சமந்தா. கடவுளின் அருளோடும், மருத்துவர்களின் ஆலோசனைகளோடு மீண்டு வந்ததாகவும், வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகவும் பழநிக்கு வந்தாராம். சமந்தா உடன் 96 பட புகழ் இயக்குனர் சி.பிரேம்குமார் உடன் வந்திருந்தார்.
கவுதம் - மஞ்சிமா வழிபாடு
சமந்தாவை தொடர்ந்து இன்று(பிப்., 14) நடிகர்களும், தம்பதியருமான கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடி பழநிக்கு சென்று முருகப்பெருமானின் அருளை பெற்றனர். வின்ச் மூலம் மலையேறி சென்ற அவர்கள் பின்னர் முருகனை வழிபாடு செய்தனர்.