'பொன்னியின் செல்வன் 2'வில் 'கமல் வாய்ஸ்'
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த வாரம் ஏப்ரல் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
கடந்த வருடம் வெளியான முதல் பாகத்தில் படத்தின் ஆரம்பத்தில் சோழர்களைப் பற்றிய அறிமுகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணிக் குரல் கொடுத்திருந்தார். இரண்டாம் பாகத்திலும் அவரது பின்னணிக் குரலுடன்தான் படம் ஆரம்பமாக உள்ளது. இது பற்றிய தகவலை நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மணிரத்னம் தெரிவித்தார்.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தான் அடுத்து நடிக்க உள்ளார். 'இந்தியன் 2' படப்பிடிப்பு முடிந்த பிறகு அப்படம் ஆரம்பமாக உள்ளது. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர்.
ரஜினியை இயக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் அதுவும் மகிழ்ச்சிதான் என்றும் மணிரத்னம் நேற்று கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் கூறியிருந்தார்.