பழம்பெரும் எடிட்டர், இயக்குனர் ஆர்.விட்டல் காலமானார்
தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய எடிட்டர் ஆர்.விட்டல்(91) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னையை சேர்ந்த ஆர்.விட்டல் படத்தொகுப்பாளராக சினிமாவில் நுழைந்து பின்னாளில் இயக்குனராகவும் அசத்தினார்.
‛ஆடு புலி ஆட்டம், ஜப்பானில் கல்யாணராமன், படிக்காதவன், முரட்டுக்காளை, நல்லவனுக்கு நல்லவன், பாயும் புலி, விக்ரம், ராஜா சின்ன ரோஜா'' உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். குறிப்பாக ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பல படங்களுக்கு இவர் தான் ஆஸ்தான எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றி உள்ள இவர் ‛முடிசூடா மன்னன், தொட்டதெல்லாம் பொன்னாகும், வீட்டுக்கு வந்த மருமகள்' உள்ளிட்ட சில படங்களையும் இயக்கி உள்ளார்.
சென்னை, கோடம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த விட்டல் சில ஆண்டுகளுக்கு முன் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அதுதொடர்பான சிகிச்சையில் மெல்ல முன்னேறி வந்த அவருக்கு இன்று(ஜூலை 26) மாலை 3:00 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. விட்டலுக்கு ராதா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்களில் ராதாவும், அவரது மகனும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். மகள் சுமதியின் பராமரிப்பில் விட்டல் இருந்து வந்தார். அவரின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.