படம் ஓடாததால் நடிகர் தற்கொலை மிரட்டல்
கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளி சென்னசந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் 'பூ போன்ற காதல்' என்ற படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் சமீபத்தில் வெளியானது. ஆனால் படம் ஒரு காட்சி கூட ஓடவில்லை.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன், வீட்டில் இருந்து வெளியேறிய சுரேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கடந்த 16ம் தேதி கிருஷ்ணகிரியில் உள்ள லாட்ஜில் அவர் தங்கியிருப்பது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. உடனடியாக அந்த லாட்ஜிற்கு சென்று பார்த்தபோது, அவர் அறையை காலி செய்து விட்டு, வேறு இடத்திற்கு சென்று விட்டார். இதுபற்றி அவரது தாய் லட்சுமி, கிருஷ்ணகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, சுரேஷ் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. அதில், 'எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள். இந்த படத்தை முடித்து சென்சார் சர்ட்டிபிகேட் வாங்க 5 லட்சம் கடன் வாங்கினேன். கடன் பிரச்னை எனக்கு ரொம்ப உள்ளது. இந்த படத்தை நம்பிதான் நான் இருந்தேன். ஆனால், 20 டிக்கெட் கூட விற்கவில்லை. இப்படியே சென்றால், கண்டிப்பாக என்னால் உயிர் வாழ முடியாது. படத்திற்காக ஏராளமானோரிடம் கடன் வாங்கியுள்ளேன். ஏராளமானோர் உதவி செய்துள்ளனர்.
அவர்களுக்கு எனது நன்றி. நாளை நான் கண்டிப்பாக உயிரோடு இருக்க மாட்டேன். நான் சாவதற்கு முன்பு இந்த செய்தியை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் இந்த படத்தை பார்க்க எப்படியும் 100 பேர் வருவார்கள். அப்போதுதான் எனது பிரச்னை கொஞ்சம் கொஞ்சமாக தீரும். அப்படி இல்லையென்றால் நாளை நான் உயிரோடு இருக்க மாட்டேன். நிறைய பேரை கஷ்டப்படுத்தி விட்டேன். இதுபோன்று யாரும் படம் எடுக்காதீர்கள். நிறைய பணம் இருந்தால் மட்டும் எடுங்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.