அவதூறாக பேசிய அதிமுக நிர்வாகி மீது சட்டப்பூர்வ நடவடிக்கை: திரிஷா உறுதி
கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவு காரணமாக, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக சசிகலா கட்டுப்பாட்டில் மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி ஏ.வி.ராஜூ என்பவர் ஒரு வீடியோவில் பேசி இருந்தார். அதில், நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியிருந்தார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு இயக்குனரும் நடிகருமான சேரன், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். சேரன் வெளியிட்ட அறிக்கையில், ‛வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கமும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.
நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோவில், ‛‛சமீப காலமாக சினிமா நடிகைகளை பொது வெளியில் கொச்சையாக பேசுவது அதிகரித்துள்ளது. வாய், நாக்கு இருப்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசுவதா? பார்க்காத ஒரு விஷயத்தை பார்த்த மாதிரி எப்படி பேசலாம். ஏவி.ராஜூவுக்கு கட்சிக்குள் பிரச்னை இருக்கலாம், அதற்காக நடிகைகளை அசிங்கமாக பேசலாமா? அவதூறாக பேசிய ராஜூ மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்'' எனக் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்த நடிகை திரிஷா, ‛‛கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன்'' என தெரிவித்துள்ளார்.