'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி
விநாயக் வைத்யநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, மிர்ணாளினி ரவி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'ரோமியோ'. மிகச் சுமாரான வரவேற்பையே இப்படம் பெற்றது. படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள்தான் அதிகம் வந்தது.
இந்நிலையில் படம் வெளியான ஒரு வாரத்திற்குப் பிறகு கடுமையான பதிவு ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் விஜய் ஆண்டனி. “பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி 'ரோமியோ' போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் அன்பு மக்களே, ரோமியோ ஒரு நல்ல படம், போய் பாருங்க புரியும்… ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில், கமல்ஹாசன், மாதவன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'அன்பே சிவம்' படம் வசூல் ரீதியாக ஓடவில்லை என்றாலும் அந்தப் படம் இப்போதும் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு படத்துடன் 'ரோமியோ' படத்தை விஜய் ஆண்டனி ஒப்பிட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.