நான் சாதி வெறியன்தான் : நடிகர் ரஞ்சித் ஆவேசம்
கோவை கோனியம்மன் கோவிலில், 'கவுண்டம்பாளையம்' திரைப்பட இயக்குநரும், பிரபல நடிகருமான ரஞ்சித் மற்றும் பட குழுவினர் சாமி தரிசனம் செய்தனர். பின், நடிகர் ரஞ்சித் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சுயமரியாதை திருமணம் என சொல்லி, எவ்வளவோ கொடுமைகள் திருநெல்வேலியில் நடந்துள்ளன. சுயமரியாதை திருமணங்களை நிறுத்த வேண்டும். சமூக நீதி பேசினால் எனக்கு கடும் கோபம் வரும்.
நான் சாதி வெறியன்தான்
சுயமரியாதை, சமூக நீதி பேசுபவர்கள் முதலில் அவர்களின் குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்துவிட்டு, மற்ற பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கட்டும். பெற்றோர் இல்லாமல் திருமணம் நடக்கக் கூடாது என சட்டம் கொண்டு வர வேண்டும். நான் நாடக காதல் என்று சொல்லும் போது, மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். இதற்காக என்னை எதிர்த்தால், நான் சாதி வெறியன் தான்.
கள்ளச்சாராயம் விற்பவர்கள் சேர் பிடித்து சட்டசபையில் அமர்ந்துள்ளனர். கடன் வாங்கி நடத்தும் ஆட்சி நல்ல ஆட்சியா. நாளைய தலைமுறையை காப்பாற்ற, அரசியல் மாற்றம் வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களுக்கு, அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர். சாலையில் திரும்பும் இடங்களில் எல்லாம், டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளது. அதை பற்றி யாரும் கேள்வி கேட்பதில்லை.
சாதாரண பிளாஸ்டிக்கையே, இவர்களால் ஒழிக்க முடியாத போது எப்படி கள்ளசாரயத்தை ஒழிப்பார்கள்? விவசாயிகள் தற்கொலை செய்தபோது, ஏன் அரசு நிவாரணம் கொடுக்கவில்லை? கள்ளுக்கடையை திறக்க வேண்டும்.
கள்ளுக்கடையில் வருமானம் இல்லாத காரணத்தினால், அரசியல்வாதிகள் விரும்புவதில்லை. தமிழ்நாடு, மதுவில் வரும் வருமானத்தில் தான் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இவ்வாறு, நடிகர் ரஞ்சித் தெரிவித்தார்.