உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சொந்த கிராமத்திற்கு வசதி செய்து கொடுத்த இயக்குனர் நாக் அஸ்வின்

சொந்த கிராமத்திற்கு வசதி செய்து கொடுத்த இயக்குனர் நாக் அஸ்வின்

'மகாநடி, கல்கி 2898 ஏடி' படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் அறிமுகமானவர் தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின். 'கல்கி 2898 ஏடி' படத்தை 1000 கோடிக்கும் அதிகமான வசூல் படமாகக் கொடுத்ததால் தற்போது பான் இந்தியா இயக்குனராகவும் பிரபலமாகிவிட்டார்.

என்னதான் உயர்ந்தாலும், தங்களது மண் மீதும், தங்களது பழைய வாழ்க்கை மீதும் மாறாத பாசம் வைத்திருப்பவர்கள் ஒரு சிலராகத்தான் இருப்பார்கள். அப்படி ஒருவராக நாக் அஸ்வின் இருக்கிறார் என டோலிவுட் உலகமும், ரசிகர்களும் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.

தெலங்கானா மாநிலத்தில், நாகர்கர்நூல் மாவட்டத்தில் உள்ள அய்தோல் கிராமத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்வதாக நாக் அஸ்வின் சொல்லியிருந்தார். அதன்படி அந்த ஊரில் உள்ள பள்ளியில் 66 லட்ச ரூபாய் செலவில் புதிதாக நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. அவற்றின் திறப்பு விழாவில் அவரது பெற்றோருடன் அவர் கலந்து கொண்டாராம். அவரது அப்பா, அம்மா இருவருமே டாக்டர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. மேலும், கோயில் ஒன்றின் புனரமைப்பும் நாக் அஸ்வின் நிதியுதவியால் நடந்து வருகிறதாம்.

மாணவர்களின் படிப்புக்காக வகுப்பறைகள் கட்டிக் கொடுத்த நாக் அஸ்வினுக்கு அந்த ஊர் மக்கள் நன்றி தெரிவித்து பாராட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !