விவாகரத்து வதந்திகளுக்கு பதில் கொடுத்த அபிஷேக் பச்சன்
பாலிவுட்டின் பிரபலமான நிஜ ஜோடியாக இருப்பவர்கள் ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன். “குரு, தாய் அக்ஷர் பிரேம் கே, குச் நா கஹோ, தூம் 2, உம்ராவ் ஜான்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தவர்கள் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய். இருவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு டீன் ஏஜ் வயதில் மகள் ஆராத்யா இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அபிஷேக், ஐஸ்வர்யா பிரிந்துவிட்டார்கள் என அடிக்கடி செய்திகள் வரும். அதன்பின் அவர்கள் இருவரும் ஒன்றாக ஏதாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். அத்துடன் அந்த வதந்தி முடிவுக்கு வந்துவிடும். சமீபத்தில் அம்பானி இல்லத் திருமண விழாவில் ஐஸ்வர்யா, அவரது மகளுடன் தனியாக வந்ததால் மீண்டும் பிரிவு வதந்தி வந்தது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அதற்கு பதிலளித்திருக்கிறார் அபிஷேக் பச்சன், “நீங்கள் எல்லாரும் ஒரு விஷயத்தை ஊதிப் பெரிதாக்கிவிட்டீர்கள். நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. உங்களுக்கு நல்ல கதைகள் தேவை. பரவாயில்லை, நாங்கள் பிரபலங்கள், அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மன்னிக்கணும், எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை. நான் இப்போதும் திருமணமானவன்தான்,” என்று கூறியுள்ளார்.