உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்முட்டி படங்கள் ஒன்று கூட விருது கமிட்டிக்கு அனுப்பப்படவே இல்லை ; இயக்குனர் பத்மகுமார் அதிர்ச்சி தகவல்

மம்முட்டி படங்கள் ஒன்று கூட விருது கமிட்டிக்கு அனுப்பப்படவே இல்லை ; இயக்குனர் பத்மகுமார் அதிர்ச்சி தகவல்


2022ம் வருடத்தில் வெளியான படங்களுக்கான எழுபதாவது தேசிய விருது பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக காந்தாரா படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக பல தேசிய விருதுகளை வென்ற மலையாள திரையுலகில் இந்த வருடம் சவுதி வெள்ளக்கா மற்றும் ஆட்டம் என இரண்டு படங்கள் மட்டுமே சில பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளன. அந்தவகையில் இந்த வருடம் நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

காரணம் கடந்த 2022ல் அவரது நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் ரோஷாக் ஆகிய படங்களில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மம்முட்டி. ஆனால் மம்முட்டிக்கு விருது கிடைக்காததுடன், ரிஷப் ஷெட்டிக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறித்து மலையாள ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டு சோசியல் மீடியாவில் பலரும் விதவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மம்முட்டி இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இந்த விருது பட்டியலில் புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவிலிருந்து தேசிய விருதுக்கான படங்களை தேர்வு செய்து மத்திய குழுவுக்கு அனுப்பும் கேரள நடுவர் குழுவில் ஒருவராக இடம்பெற்றுள்ள இயக்குனர் எம்.பி பத்மகுமார் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது மம்முட்டியின் படங்கள் எதுவுமே இந்த விருதுக்கான தேர்வில் கலந்துகொள்ள அனுப்பப்படவே இல்லை என்றும் அப்படி இருக்கையில் எப்படி மம்முட்டிக்கான சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் மத்தியில் இருக்கும் அரசு விருதுகளை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதில்லை என்றும் இங்கே மம்முட்டி படத்தை இந்த விருதுகளுக்கான தேர்வுக்கு அனுப்பாமல் விட்டது யாருடைய தவறு என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். இத்தனைக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை இயக்கிய இயக்குனர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி தனது படங்களை தவறாமல் இது போன்ற விருதுகளின் தேர்வுக்கு தொடர்ந்து அனுப்பி வைத்து வருபவர். அவர் எப்படி தனது படத்தை அனுப்ப தவறினார் என்றும் தற்போது ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !