உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீ ரிலீஸ் மோதலில் விஜய், அஜித் ரசிகர்கள்

ரீ ரிலீஸ் மோதலில் விஜய், அஜித் ரசிகர்கள்

'ஜனநாயகன்' படத்துடன் சினிமாவை விட்டு விலகும் முடிவை எடுத்துள்ளார் விஜய். இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டசபைத் தேர்தலில் அவரும், அவரது தவெக கட்சியினரும் போட்டியிட உள்ளார்கள். இருந்தாலும் சினிமா சண்டையை விஜய் ரசிகர்கள் இன்னும் நிறுத்தவில்லை, நிறுத்தப் போவதுமில்லை.

தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான ரீரிலீஸ் படங்களில் விஜய் நடித்த 'கில்லி' படம் 2024ல் ரீரிலீஸ் ஆகி சுமார் 30 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்தது. அந்தப் படத்தின் வசூலை கடந்த வருடம் டிசம்பர் மாதம் ரீரிலீஸ் ஆன ரஜினிகாந்த்தின் 'படையப்பா' படம் முறியடிக்குமா என்ற கேள்வி இருந்தது. அப்படத்தின் ரீரிலீஸ் வசூல் சுமார் 20 கோடியை நெருங்கியதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அஜித்தின் 'மங்காத்தா' படம் நேற்று ரீரிலீஸ் ஆனது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் திரண்டு படத்தைக் கொண்டாடினர். நேற்றைய முதல் நாள் வசூலும் சிறப்பாக இருந்ததாகச் சொல்கிறார்கள். அடுத்த மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் என்பதால் இப்படத்தின் வசூல் நன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, 'கில்லி, மங்காத்தா' இரண்டு படங்களின் ரீரிலீஸ் வசூல், கொண்டாட்டங்கள் பற்றி அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதல் பதிவுகளைப் போட ஆரம்பித்துவிட்டார்கள்.

விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படம் இன்னும் வெளிவராத கடுப்பில் இருக்கும் விஜய் ரசிகர்களுக்கு 'மங்காத்தா' ரீரிலீஸ் கொண்டாட்டம் கொஞ்சம் எரிச்சலைத்தான் தந்துள்ளது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !