பொன்னான நாட்கள் : இளையராஜாவுடன் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்த கிருஷ்ண வம்சி
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் கிருஷ்ண வம்சி. நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவர். தெலுங்குத் திரையுலகத்தில் 'சிவா' படத்தின் மூலம் அறிமுகமாகி ஹிந்தியிலும் சில சூப்பர் ஹிட்களைக் கொடுத்த ராம்கோபால் வர்மாவின் முன்னாள் உதவியாளர்.
1995ல் வெளிவந்த 'குலாபி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருஷ்ணவம்சி. அந்தப் படம் மூலம் சிறந்த இயக்குனருக்கான ஆந்திர மாநில அரசின் நந்தி விருதைப் பெற்றவர். அதற்கடுத்து அவரது இயக்கத்தில் வந்த 'நின்னெ பெல்லடதா, சிந்தூரம்' ஆகிய படங்கள் சிறந்த தெலுங்குப் படங்களுக்கான தேசிய விருதுகளை வென்றவை.
இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து 1998ல் வெளிவந்த 'அந்தப்புரம்' படத்தில்தான் முதலில் பணிபுரிந்தார். அதற்கடுத்து 25 வருடங்களுக்குப் பிறகு 2023ல் வெளிவந்த 'ரங்கமார்த்தாண்டா' படத்தில் மீண்டும் இணைந்தனர்.
இரு தினங்களுக்கு முன்பு இளையராஜாவுடன் அவர் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “பொன்னான நாட்கள் ... 'சிவா' திரைப்படத்தின் பின்னணி இசை உருவாக்கப்படும் போது இசையின் கடவுள் இளையராஜா சார் பாம்பே லேப்-ல் அப்போதைய பாம்பேயில் 1989ல்..... அவர் எனது கோரிக்கையை அன்புடன் ஏற்று, வாழ்நாள் நினைவாக அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள அனுமதித்தார்... எனது மிகச் சிறந்த நினைவு,” எனப் பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவிற்கு ராம்கோபால் வர்மா, “என்னிடத்திலும் ஒரு புகைப்படம் இருக்கும் என நினைக்கிறேன்,” என்று கமெண்ட் போட்டிருந்தார். அவை எக்ஸ் தளத்தில் வைரலாகப் பரவியுள்ளது.