உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஆதி புருஷ்' 400 கோடி அள்ளியது : ஓம் ராவத் பேச்சு மீண்டும் சர்ச்சை

'ஆதி புருஷ்' 400 கோடி அள்ளியது : ஓம் ராவத் பேச்சு மீண்டும் சர்ச்சை

பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் பான் இந்தியா படமாக 'ஆதி புருஷ்' வெளியானது. ராமாயணத்தைத் தழுவி, மோஷன் கேப்சரிங் முறையில் எடுக்கப்பட்ட படம் இது.

சுமார் 700 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக சொல்லப்பட்டது. ஆனால், படத்தில் இடம் பெற்ற மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம், விஎப்எக்ஸ் காட்சிகள் ஆகியவை ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதற்கான உருவத் தோற்றங்களும் ரசிகர்களுக்கு திருப்திகரமாக அமையவில்லை. அதனால் அப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. தெலுங்கில் மட்டும் நல்ல வசூலைக் கொடுத்தாகச் சொன்னார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தின் இயக்குனர் ஓம் ராவத், “இந்திய சினிமாவின் தோல்விக்கான ஆதார நடிகர்கள் என சல்மான் கான், பிரபாஸ் ஆகியோரைச் சொல்லலாம். ஆனால், அவை எதுவும் பிரபாஸை பாதிக்காது. 'ஆதி புருஷ்' படத்திற்கு சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தெலுங்கில் மட்டுமே 200 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது,” என்று பேசியுள்ளார்.

பிரபாஸ் பற்றி குறிப்பிடும் போது ஆங்கிலத்தில் 'பிளாப் - ப்ரூப்' நடிகர்கள் என்ற அர்த்தத்தில் அவர் பேசியதையும், அந்தப் படத்தின் தோல்வியை அவர் இன்னும் ஏற்கவில்லை என்பது குறித்தும் மீண்டும் ரசிகர்கள் அவரை டிரோல் செய்ய ஆரம்பித்தனர்.

சமீபத்தில்தான் 'கல்கி 2898 ஏடி' படம் பற்றி அர்ஷத் வர்சி பேசியது சர்ச்சையானது. தற்போது ஓம் ராவத் இப்படி பேசியிருப்பதும் சர்ச்சையாகி உள்ளது. பாலிவுட்டில் பிரபாஸின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பதையே இது காட்டுகிறது என அவரது ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !