100 நாட்களைக் கடந்த ராமராஜனின் 'சாமானியன்' !!!
ராகேஷ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ராமராஜன், ராதாரவி, எம்எஸ் பாஸ்கர், கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பலர் நடிப்பில் மே மாதம் 23ம் தேதி வெளியான படம் 'சாமானியன்'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படம். இப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியுள்ளதாக படக்குழுவினர் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதற்காக அவர்கள் வெளியிட்ட போஸ்டரில் ஆலங்குளம் ஊரில் படம் ஓடிவருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். படத்தின் 50வது நாள் போஸ்டர் வெளியிட்ட போதும் அதே ஊரில், அதே தியேட்டரில் ஓடிவருவதாகப் போட்டிருந்தார்கள். இந்தக் காலத்தில் ஒரே தியேட்டரில் 50 நாட்களைக் கடந்து 100 நாள் வரை ஒரு படம் ஓடுவது ஆச்சரியம்தான்.
இன்று கூட 'சாமானியன்' படம் அந்த ஆலங்குளம் தியேட்டரில் 3 காட்சிகளாக ஓடி வருகிறது என ஆன்லைன் இணையதளத்தில் பார்க்க முடிகிறது. சுமார் 50 சதவீதத்திற்கும் மேலான டிக்கெட்டுகள் முன்பதிவும் செய்யப்பட்டுள்ளது.