பிளாஷ்பேக் : பாடி லாங்குவேஜ் காமெடியில் கலக்கிய வி.எம்.ஏழுமலை
தமிழ் சினிமா மறந்த முக்கியமான காமெடி நடிகர் வி எம் ஏழுமலை. காமெடி நடிகர்களில் இரண்டு வகை உண்டு டயலாக் மூலமாக சிரிக்க வைப்பவர் ஒருவர். உடல் மொழியால் சிரிக்க வைப்பவர்கள் மற்றவர். சினிமா தொடங்கிய காலங்களில் வசனங்களால் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் பாடி லாங்குவேஜ் எனும் உடல் மொழியால் சிரிக்க வைத்த நடிகர் வி.எம் ஏழுமலை.
1939ம் ஆண்டிலிருந்து 1960 வரை ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தவர் பின்னர் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானார். திரையுலகுக்கு வந்த சிறிது காலம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் நடிகராகப் பணியாற்றினார். அப்போது இவருடன் நகைச்சுவை நடிகர்களான காளி என். ரத்தினம், ஏ. கருணாநிதி போன்றோரும் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
டவுன் பஸ், மிஸ்ஸியம்மா, மலைக்கள்ளன், மாயா பஜார், திகம்பர சாமியார், பொன்முடி, குணசுந்தரி, கடன் வாங்கி கல்யாணம், இல்லறமே நல்லறம், எல்லோரும் வாழ வேண்டும் போன்ற படங்கள் ஏழுமலை நடித்ததில் முக்கியமானவை.