உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தள்ளுபடி

ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தள்ளுபடி


தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். 2018ம் ஆண்டு ஜிஎஸ்டி இணை இயக்குனர் அவருக்கு வரி விதிப்பு குறித்த நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதை எதிர்த்து 2019ம் ஆண்டில் ஹாரிஸ் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

தான் இசையமைக்கும் படங்களுக்கான நிரந்தர உரிமையைத் தயாரிப்பாளர்களுக்குக் கொடுத்துவிட்டதால் தனக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க முடியாது என்றும், அதனால், அந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அந்த வழக்கை நீதிபதிகள் சுரேஷ்குமார், சரவணன் தள்ளுபடி செய்துள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்த நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம்தான் முறையிட வேண்டும். அனுப்பப்பட்ட நோட்டீஸூக்கு பதில் அளித்து அதில் ஆட்சேபனைகளைக் குறிப்பிடலாம். அவற்றை நான்கு வாரங்களில் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களான வேந்தர் மூவிஸ், உண்டர் பார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இப்படி தொடர்ந்து வழக்குகளுக்கு பதில் விளக்கம் கேட்டு ஜிஎஸ்டி அதிகாரியிடம் முறையிட வேண்டும் என்ற முந்தைய தீர்ப்புகளையும் நீதிபதிகள் மேற்கோள் காட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !