சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் 'மகாராஜா'. 100 கோடி வசூலைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய படம். அதன் பின் ஓடிடி தளத்தில் வெளிவந்து உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள சினிமா ரசிகர்களும் படத்தைப் பார்த்து ரசித்துப் பாராட்டினார். அப்பாவுக்கும், வளர்ப்பு மகள் ஒருவருக்கும் உள்ள பாசப் பிணைப்புதான் இந்தப் படம். அதனால், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை ஈர்த்தது.
சீனாவில் இப்படம் சுமார் 50 ஆயிரம் காட்சிகளாக இன்று வெளியாகிறது. தமிழர்களைப் போலவே குடும்பம், உற்றார் உறவினர் என பாசமாக வாழும் கலாச்சாரம் கொண்டவர்கள் சீனர்கள். அதனால், அங்கும் இப்படம் பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சில நாட்களாக நடைபெற்ற பிரிமியர் காட்சிகளில் படத்தைப் பார்த்த சீன ரசிகர்கள் படம் பார்த்து அழுத வீடியோக்கள் வெளிவந்தது.
இன்று வெளியாகும் இப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “சீனாவில் மகாராஜா படம் பெரிய அளவில் வெளியாகிறது. இது மிகவும் பெருமையான ஒன்று. அங்கும் இப்படம் பெரும் வெற்றி பெறும் என நம்புகிறேன். விஜய் சேதுபதி, நிதிலன் சாமிநாதன் மற்றும் மொத்த குழுவினருக்கும் எல்லையைக் கடந்து சாதிக்க வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மகாராஜா படம் முதல் நாள் சீனாவில் முன்பதிவில் மட்டும் ரூ.5.5 கோடிக்கு மேல் வசூலைக் கடந்துள்ளதாக விநியோக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.