மாதவன், கங்கனா படத்தில் கவுதம் கார்த்திக்
ADDED : 262 days ago
தலைவி படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் அடுத்து மாதவன், கங்கனா ரணாவத் இருவரையும் முதன்மை கதாபாத்திரமாக வைத்து 'லைட்' எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே ஹிந்தியில் மாதவனும், கங்கனாவும் இணைந்து தனு வெட்ஸ் மனு போன்ற படங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர்.
தமிழ், ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது இதில் சற்றே நீண்ட சிறப்பு தோற்றத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கிறாராம். தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கவுதமும் கலந்து கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்காக சற்று இளைத்து இன்னும் இளமையான தோற்றத்திற்கு மாறி உள்ளார் கவுதம் கார்த்திக்.