உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கர்நாடகா - அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.200 மட்டும்…

கர்நாடகா - அதிகபட்ச டிக்கெட் விலை ரூ.200 மட்டும்…

தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்தவரையில் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களில் தமிழ்நாட்டில்தான் அதிகபட்ச கட்டணம் என்பது ரூ.195 வரை உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதற்கும் அதிகமாகத்தான் உள்ளது. கர்நாடகாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 400 ரூபாய்க்கு அதிகமாகத்தான் உள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் புதிய படங்களுக்கு பத்து நாட்கள் வரையில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அரசு ஆணை பிறப்பிக்கிறது.

கட்டணங்களை உயர்த்திவிட்டு 1000 கோடி வசூல் பெற்றதாக அவர்கள் கொண்டாடிக் கொள்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் 200 ரூபாய்க்கு சற்று அதிகமாக டிக்கெட் கட்டணம் மட்டுமே வசூலித்து நல்ல வசூலைப் பெறுகிறார்கள். இங்கும் ஆந்திரா, தெலங்கானா போல இரண்டு மடங்கு வசூலித்திருந்தால் எப்போதோ 1000 கோடி வசூலை தமிழ்ப் படங்கள் கடந்திருக்கும்.

கர்நாடகா அரசு தற்போது ரூ.200க்கு மேல் தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் உள்ளிட்ட தியேட்டர்களிலும் அதிகபட்ச கட்டணமாக அதுதான் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்துவிதமான மொழிப் படங்களுக்கும் அதுதான் கட்டணம்.

கடந்த பல வருடங்களாக கர்நாடகாவில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரூ.600 வரை கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக பெங்களூரு மாநகரில் படம் பார்க்கச் சென்றால் அவ்வளவு செலவு ஆகும். அரசின் அறிவிப்பால் தியேட்டர்களுக்குப் படம் பார்க்கச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் கூட்டத் தொடரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்ட இந்த அறிவிப்புக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே சமயம் அதிக பொருட்செலவில் படமெடுத்து கர்நாடகாவில் நல்ல வசூலைப் பெறும் தெலுங்கு தயாரிப்பாளர்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !