உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : கிராமங்களில் திரைகட்டி காட்டப்பட்ட சுஹாசினி படம்

பிளாஷ்பேக் : கிராமங்களில் திரைகட்டி காட்டப்பட்ட சுஹாசினி படம்

கே.பாலச்சந்தர் இயக்கிய 'தண்ணீர் தண்ணீர்' படத்தின் கதையை நாடகமாக நடத்தி வந்தவர் கோமல் சாமிநாதன். அவரது நாடகங்களில் ஒன்றுதான் 'ஒரு இந்திய கனவு'. இந்த நாடகத்தையும் அதே பெயரில் படமாக்கினார். அவரே இயக்கவும் செய்தார். சுஹாசினி, லலிதா, ராஜேஷ், பூர்ணம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.

அமைச்சரின் மகனால் பலாத்காரம் செய்யப்பட்டு தற்கொலைக்கு உள்ளான ஒரு ஆதிவாசி பெண்ணிற்கு நீதி கேட்டு போராடும் ஒரு பட்டதாரி பெண்ணின் கதை. ஆதிவாசி பெண்ணாக லலிதாவும், பட்டதாரி பெண்ணாக சுஹாசினியும் நடித்தனர். இந்த படம் கமர்ஷியலாக பெரிய வெற்றியை பெறாவிட்டாலும், அனைவராலும் பாராட்டப்பட்டது. சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.

கம்யூனிஸ்ட் கட்சியினர் இந்த படத்தை கிராமங்கள் தோறும் திரை கட்டி 16எம்எம் புரொஜக்டரில் மக்களுக்கு திரையிட்டு காட்டினார்கள். இதற்கென்றே கம்யூனிஸ்ட் கட்சிகள் சொந்தமாக புரொஜக்டரும் வாங்கியது. அதோடு இந்தப் படம் ரஷ்ய நாட்டில் ரஷ்ய மொழி சப்டைட்டலுடன் திரையிடப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது.

லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிடியூட், புனே பிலிம் இன்ஸ்டியூட், ரஷ்யன் கல்சர் செண்டர் ஆகியவற்றில் பாதுகாக்கப்பட்டு வருவதோடு இதன் கதை, திரைக்கதை பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !