உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அதிக பணம் கொடுத்து தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள்

அதிக பணம் கொடுத்து தடுமாறும் ஓடிடி நிறுவனங்கள்

கொரோனா வந்த பிறகு ஓடிடி நிறுவனங்கள் இந்தியாவில் பிரபலமடைந்தன. அதிகமான சந்தாதாரர்களையும் அவை பெற்றன. மேலும், இன்டர்நெட் தொடர்பு எடுப்பதன் மூலமும் பல ஓடிடி தளங்களை இந்த இன்டர்நெட் நிறுவனங்கள் இலவசமாக வழங்கின. இதனால், ஓடிடி தளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. இதனால், தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது.

ஒரு புதிய தமிழ்ப் படம் வெளிவந்தால் அதிக பட்சமாக நான்கு வாரங்களில் அப்படம் ஓடிடியில் வந்துவிடும். அதனால், தியேட்டர்களுக்குப் போகாமல், ஓடிடி தளத்தில் வெளியாகும் வரை காத்திருந்து படங்களைப் பார்த்துவிடுகிறார்கள் ரசிகர்கள். இது ஓடிடி தளத்திற்குரிய வருமானத்தை அதிகமாக்குவதாகவும் இருந்தது.

அதே சமயம் ஓடிடி தளத்தில் சில முன்னணி நடிகர்களின் படங்களை அதிக விலை கொடுத்து வாங்கி நஷ்டமடைவதும் தொடர்கிறது. குறிப்பாக சமீபத்தில் வெளியான ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்', அஜித் நடித்த 'விடாமுயற்சி' ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் மோசமான வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்துள்ளன. பல கோடிகளைக் கொடுத்தே அப்படங்களின் ஓடிடி உரிமைகளைப் பெற்றுள்ளார்கள். ஆனால், அவற்றை ஓடிடியில் பார்த்தவர்களின் எண்ணிக்கை கோடியைக் கூடத் தாண்டவில்லை என்கிறார்கள்.

தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் அப்படியான ஒரு நிலைதான் உள்ளதாம். இதனால், ஓடிடி நிறுவனங்கள் இப்போது உஷாராகிவிட்டது. தியேட்டர்களில் வெளியான பின்பும் பல படங்களுக்கான ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படாமலேயே உள்ளது. அப்படியே அவற்றை வாங்கினாலும், பார்ப்பதற்கு ஏற்றபடி தொகையைத் தரும் முறையை ஓடிடி நிறுவனங்கள் பரிந்துரைக்கிறதாம். அப்படி வரும் வருவாய் தயாரிப்பாளர்களுக்கு சில லட்சங்களுடன் நின்று விடுகிறதாம்.

இந்த நிலை தொடர்ந்தால் ஓடிடி நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்கும் நிலை அதிகமாகும் என்று சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !