உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு

இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு

திரையுலக பிரபலங்கள் தங்கள் பர்சனல் விஷயங்களையும் சினிமா குறித்த அப்டேட்டுகளையும் பகிர்ந்து கொள்வதற்காக எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சமீபகாலமாகவே இப்படி பலரது சமூக வலைதள கணக்குகள் அதிலும் குறிப்பாக எக்ஸ் கணக்குகள் அடிக்கடி சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கும் கடந்த பிப்ரவரி மாதம் ஹேக் செய்யப்பட்டது.

இந்த தகவலை அப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மூலமாக தெரிவித்து ரசிகர்களை எச்சரித்து இருந்தார். இரண்டு மாதம் கழிந்த நிலையில் அவரது எக்ஸ் கணக்கு வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை வீடியோ ஒன்றின் வாயிலாகவே தெரிவித்துள்ளார் ஸ்ரேயா கோஷல்.

இது குறித்து அவர் கூறும்போது, “நான் திரும்ப வந்து விட்டேன்.. இனி அடிக்கடி நிறைய எழுத போகிறேன்.. பேச போகிறேன்.. பிப்ரவரியில் ஹேக்கிங் செய்யப்பட்ட என்னுடைய எக்ஸ் கணக்கு பல இடைஞ்சல்களுக்குப் பிறகு எக்ஸ் குழுவினரின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இப்போது அனைத்தும் நன்றாகவே இருக்கிறது.

இந்த இடைப்பட்ட காலத்தில் என்னைப் பற்றிய தவறான சில கட்டுரைகள், விளம்பரங்கள், எஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் என என் கணக்கில் வெளியாகின. வரும் காலங்களில் இவற்றையெல்லாம் தடை செய்யும் விதமாக எக்ஸ் நிர்வாகம் விதிமுறைகளை மாற்றி அமைத்தால் நன்றாக இருக்கும்.. விரைவில் அவர்கள் இதை செய்வார்கள் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !