பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் காணாமல் போன நடிகை
சில நடிகைகள் அழகாக இருப்பார்கள், திறமையாகவும் நடிப்பார்கள் ஆனால் என்ன காரணத்தினாலோ ஒரு படத்துடன் அவர்கள் காணாமல் போய்விடுவார்கள். அதற்கான காரணம் யாருக்கும் தெரியாது. இது இந்த காலத்தில் மட்டுமல்ல அந்த காலத்திலும் நடந்திருக்கிறது.
இப்படி ஒரே படத்தில் ரசிகர்களை கவர்ந்து விட்டு காணாமல் போனவர்களில் ஒருவர் என். நந்தினி. 1948ம் ஆண்டு வெளிவந்த 'என் கணவர்' என்ற படத்தில் நடித்தவர் என்.நந்தினி. மும்பையைச் சேர்ந்த அஜித் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த இந்த படத்தை வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கி, நடித்தார். சத்ரபதி ஜோஷி இன்று மராட்டிய எழுத்தாளர் எழுதிய கதையை, ஜாபர் சீத்தாராமன் தமிழில் எழுதினார். செல்லம் என்ற நடிகை முக்கிய கேரக்டரில் நடித்தார்.
பெரும் பணக்காரரான வீணை பாலச்சந்தர் தன் மனைவி நந்தினி உடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்களது வாழ்க்கைக்குள் நுழையும் இளம் பெண்ணாக செல்லம் நடித்திருந்தார். இந்த மூன்று கேரக்டர்களையும் சுற்றி வரும் எளிய கதை. இதில் செல்லத்தின் அழகும், நந்தினி நடிப்பும் பேசப்பட்டது. செல்லம் பல படங்களில் நடித்தார். ஆனால் நந்தினி இந்த படத்திற்கு பிறகு வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்றும் தெரியவில்லை.
படத்திற்கு வீணை எஸ். பாலச்சந்தர் இசையமைத்திருந்தார். படத்தின் திரைக்கதை பரவலாக பாராட்டப்பட்டாலும், படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.