தொடரும் - அடுத்த 100 கோடி நோக்கி மோகன்லால்
மலையாள சினிமா உலகில் வசூல் நாயகன் என்ற பெயரை எடுத்து வருகிறார் மோகன்லால். அவர் நடித்து மார்ச் மாதம் வெளியான 'எல் 2 எம்புரான்' படம் மலையாள சினிமா உலகில் அதிக வசூலாக 250 கோடியைக் கடந்தது. அப்படம் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாக 'தொடரும்' படம் வெளிவந்தது.
தருண்மூர்த்தி இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் வெளியான மூன்று நாட்களில் 69 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். மோகன்லால் நடித்து அடுத்தடுத்து வெளியான இரண்டு படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படமும் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
மோகன்லால் தான் மலையாளத் திரையுலகத்தில் முதன் முதலில் 100 கோடி வசூலைப் பெற்ற கதாநாயகன். அவர் நடித்து 2016ல் வெளிவந்த 'புலிமுருகன்' படம்தான் மலையாளத்தில் முதல் 100 கோடி படம்.
அதன்பின் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த 'லூசிபர் (2019), எல் 2 எம்புரான் (2025) ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்தன. 'தொடரும்' படமும் 100 கோடியைக் கடந்தால் அது மோகன்லாலில் 4வது 100 கோடி படமாக அமையும்.
2013ல் வெளிவந்த 'த்ரிஷ்யம்' படம் மூலம் மலையாளத்தில் 50 கோடி வசூலைப் பெற்ற முதல் கதாநாயகனும் மோகன்லால் தான்.