தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்'
விஜய் நடித்த 'வாரிசு' படத்தைத் தயாரித்த தில் ராஜு தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், எஸ்ஜே சூர்யா, கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் இந்த வருட சங்கராந்திக்கு வெளியான படம் 'கேம் சேஞ்ஜர்'. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் படுதோல்வி அடைந்தது. இப்படத்தின் முதல் நாள் வசூல் என வெளியிட்ட போஸ்டரும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக டிரோல் செய்யப்பட்டது.
இப்படத்திற்கு முன்பாக ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர் நடித்த படம் 1000 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றது. அதனால், ராம் சரண் இந்தப் படத்தில் பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அனைத்துமே ஏமாற்றத்தில் முடிந்துள்ளது.
தியேட்டர்களில் வெளியான போது 200 கோடி வசூலைக் கூடக் கடக்கவில்லை. அடுத்து ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது. அதன்பின் காட்சிக்குக் காட்சி இப்படத்தை டிரோல் செய்து கிண்டலடித்தனர். சரி, டிவி ஒளிபரப்பிலாவது இப்படம் நல்ல ரேட்டிங்கைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக நிறையவே விளம்பரம் செய்துள்ளார்கள். கடந்த ஏப்ரல் 27 ஞாயிறு அன்று இப்படம் முதல் முறையாக டிவியில் ஒளிபரப்பப்பட்டது. எவ்வளவு செய்தும் இப்படம் 5.02 ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளதாம்.
சமீப காலங்களில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு தெலுங்குப் படம் இவ்வளவு குறைவான டிவி ரேட்டிங்கைப் பெற்றுள்ளது திரையுலக வட்டாரங்களிலும், டிவி வட்டாரங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுததியுள்ளது.