உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி

விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. சமீப காலமாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களிலும் இவர் வில்லனாக நடித்துள்ளார். இரண்டு மாதங்களாக இவர் போதை வழக்கு சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து போலீஸ் விசாரணைக்கு ஆளாகி அதன்பிறகு போதை மீட்பு மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக பெங்களூருக்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் தனது குடும்பத்துடன் காரில் பயணித்தார். இவர்களது கார் சேலம் அருகே வந்த போது, பின்னால் வந்த லாரி இவர்கள் கார் மீது மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே ஷைன் டாம் சாக்கோவின் தந்தை பி.சி.சாக்கோ பலியானார். சாக்கோ உள்ளிட்ட மற்றவர்கள் சேலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் திருச்சூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் பிரபல மலையாள நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி திருச்சூரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷைன் டாம் சாக்கோ மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் அவரது தந்தையின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவருக்கு தனது ஆறுதலையும் கூறினார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, “ஷைன் டாம் சாக்கோ சென்ற காரின் பின்னால் வேகமாக வந்த லாரி அதன் ஸ்டேரிங் லாக் ஆகி விட்டதால் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை பலியானது துரதிர்ஷ்டம்.. அவரது மறைவு குறித்து தற்போது சிகிச்சையில் இருக்கும் அவரது மனைவியிடம் இன்னும் தகவல் சொல்லப்படவில்லை. வெளிநாட்டில் இருக்கும் அவரது இரண்டு மகள்கள் கேரளா வந்ததும் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும். அதன் பிறகு ஷைன் டாம் சாக்கோவிற்கு ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட இருக்கிறது” என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !