பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர்
மைசூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த கெம்ப்ராஜ், சென்னை மைலாப்பூரில் வசித்து வந்தார். 1950களில் அவர் தமிழ் மற்றும் கன்னடத்தில் படங்களைத் தயாரித்தார். அவர் தயாரித்த முதல் படம், ராஜ விக்கிரமா . தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாரிக்கப்பட்டது. இவரே இயக்கவும் செய்தார். கன்னட தலைப்பு சனிஸ்வர மகாத்மெய். 3 மனைவிகளுடன் வாழும் ஒரு மன்னன் (ராஜ விக்கிரமா), சனீஸ்வர பகவானின் சாபத்தை பெறுகிறார். அந்த சாபத்தில் இருந்து அவன் எப்படி விடுபடுகிறான் என்பதுதான் படத்தின் கதை.
மன்னனாக தயாரிப்பாளர் கெம்பராஜ் நடித்தார், அவரது மனைவிகளாக ஜெயம்மா, ராஜம்மா நடித்தனர். 3வது மனைவியாக கெம்பராஜின் சொந்த மனைவியான லலிதா நடித்தார். சுமார் ஆயிரம் அடிகள் படத்தை எடுத்த பிறகு அதனை தியேட்டர் அதிபர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போட்டு காட்டினார். அதனை பார்த்த அவர்கள் 'எல்லாம் சரிதான். ஆனால் உங்கள் மனைவி ஒரு நடிகைக்கான அழகுடனும் இல்லை, அவரது குரல் ஆண் குரல் போன்று உள்ளது' என்று கூறினார்.
இதனை தொடர்ந்து மனைவி லலிதாவை படத்தை விட்டு நீக்கிய கெம்பராஜ், அவருக்கு பதிலாக பண்டரிபாயை நடிக்க வைத்தார். மனைவி லலிதா படத்தயாரிப்பு நிர்வாக பொறுப்பை ஏற்றுச் செய்தார்.
இந்த படத்தில் இவர்கள் தவிர சி.வி.வி.பந்துலு, ஸ்டண்ட் சோமு, கே.எஸ்.அங்கமுத்து, கணபதி பட், டி.வி.சேதுராமன், என்.எஸ்.சுப்பையா, சாரதாம்பாள், மணி ஐயர் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் நடித்தனர். இந்தப் படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் அதன் கன்னடப் பதிப்பு பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது.