பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட்
இந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமை மது அம்பாட். கேரளாவைச் சேர்ந்த இவர் 50 ஆண்டுகளாக தொடர்ந்து ஒளிப்பதிவாளராக இருக்கிறார். இந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிப்பதிவு செய்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த இவர் திரைப்படக் கல்லூரியின் தங்கபதக்கம் பெற்ற மாணவர்.
1973ல், செம்மீன் புகழ் ராமு கரியத் இயக்கிய 'இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்ஸ்' பற்றிய ஆவணப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மதுவின் முதல் முழு நீள மலையாள திரைப்படம் 1975ல் வெளியான 'லவ் லெட்டர்'. இது அவருக்கு சினிமாவில் பொன்விழா ஆண்டு. இப்போதும் அவர் 'பறந்து பறந்து செல்லான்' என்ற மலையாள படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
சிருங்காரம் , ஆதி சங்கரர், ஆதாமின்ட மகன் ஆகிய படங்களுக்காக தேசிய விருது பெற்றார். இது தவிர கேரள அரசின் 4 விருதுகளை பெற்றுள்ளார். அஞ்சலி, நம்மவர், ஆடும் கூத்து, தீ குளிக்கும் பச்சை மரம், சிவப்பு, அப்பத்தா, சிருங்காரம் போன்றவை அவர் ஒளிப்பதிவு செய்த முக்கிய தமிழ் படங்கள்.