பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர்
1950களில் நடந்த கல்லக்குடி போராட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும். டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றி கல்லக்குடி என்ற தமிழ் பெயரை வைக்க வேண்டும் என்று நடந்த போராட்டம். இந்த போராட்டத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தது அவரது அரசியல் வாழ்வில் பெரிய திருப்புமுனை.
ஆனால், கல்லக்குடி போராட்டத்திற்கு எம்ஜிஆர் நாடகத்தில் நடித்து நிதி திரட்டிக் கொடுத்தது பலரும் அறியாத ஒன்று. அந்த நாடகத்தின் பெயர் 'இடிந்த கோவில்'. எம்ஜிஆர் நாடக மன்றத்தினர் நடத்திய இந்தத நாடகத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
சினிமாவில் ஹீரோவான பிறகு எம்ஜிஆர் நடித்த முதல் நாடகம் இது. 1953ம் ஆண்டு திருச்சி தேவர் மன்றத்தில் நடந்த இந்த நாடகத்தில் எம்ஜிஆருடன் அவரது அண்ணன் சக்கரபாணி, கே.ஏ.தங்கவேல், முஸ்தபா, நாராயண பிள்ளை, திருப்பதி சாமி, குண்டுமணி உள்பட பலர் நடித்தனர்.
நாடகத்தின் கதையை விஸ்வம் எழுதியிருந்தார். ரவீந்திரன் வசனம் எழுதி இருந்தார். நாடகம் பார்க்க அதிகபட்ச கட்டணம் 5 ரூபாய், குறைந்த கட்டணம் 8 அணா. இரண்டு நாள் நடந்த இந்த நாடகத்தின் வசூலை போராட்ட குழுவிற்கு எம்ஜிஆர் வழங்கினார்.