உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரயிலில் விழப்போன மஞ்சு வாரியர் : காப்பாற்றிய மனோஜ் கே.ஜெயன்

ரயிலில் விழப்போன மஞ்சு வாரியர் : காப்பாற்றிய மனோஜ் கே.ஜெயன்

மலையாள திரையுலகையும் தாண்டி சமீப வருடங்களாக தமிழிலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை மஞ்சு வாரியர். சினிமாவில் இவர் அறிமுகமானது இயக்குனர் லோகிததாஸ் இயக்கத்தில் 1996ல் வெளியான சல்லாபம் என்கிற திரைப்படம் மூலம் தான். அந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் மனோஜ் கே.ஜெயன். படம் வெளியாகி கிட்டத்தட்ட 30 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் மனோஜ் கே.ஜெயன் ஒரு பேட்டியில் கூறும்போது, மஞ்சு வாரியர் அந்த படத்தில் அவருடைய உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் விதமாக எப்படி நடித்தார் என்பது குறித்து கூறியுள்ளார்.

இது பற்றி அவர் கூறும்போது, “சல்லாபம் படம் தான் மஞ்சு வாரியர் அறிமுகமான முதல் படம். முதல் படத்திலேயே அவர் ஒரு அறிமுக நடிகைக்கான எந்த தயக்கங்களும் இன்றி அந்த கதாபாத்திரமாகவே மாறி எதார்த்தமாக நடித்தார். படப்பிடிப்பு துவங்கி கிட்டத்தட்ட 24 நாட்கள் ஆன நிலையில், அதன் கிளைமாக்ஸ் காட்சியை ஒரு ரயில்வே டிராக்கில் படம் ஆக்கினார்கள். தன் உண்மையான காதல் தனக்கு கை கூடாத நிலையில் ஓடும் ரயிலில் விழுந்து தன் உயிரை மஞ்சு வாரியர் கதாபாத்திரம் மாய்த்துக் கொள்வதாக காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. அந்த காட்சியில் நானும் இடம் பெற்றிருந்தேன்.

ஆனால் மஞ்சு வாரியர் வசனம் பேசியபடி தன்னை மறந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி ரயில் தண்டவாளத்தை நெருங்கி விட்டார். ரயில் கிட்டத்தட்ட அருகில் நெருங்கி விட்டது. அந்த சமயத்தில் உடனடியாக நான் அவரது கரங்களை வலுவாக பிடித்து மேலும் போகவிடாமல் தடுத்து நிறுத்தினேன். சரியாக அந்த நேரத்தில் ரயிலும் எங்களை மிக அருகில் ஒட்டியபடி சென்றது.

ரயில் சென்றதும் பின்னாலிருந்து இயக்குனர் கட் சொன்ன பிறகு தான் அவரை என் பிடியிலிருந்து விடுவித்தேன். அந்த காட்சி வீணாகிவிட்டது என்று தான் நினைத்தேன். ஆனால் படக்குழுவினர் காட்சி மிகவும் தத்ரூபமாக இருந்தது என பாராட்டினார்கள். அன்று மட்டும் அவரை இழுத்து பிடிக்க விட்டால், அவர் ரயில் சக்கரங்களில் விழுந்து இருப்பார். ஒரு நல்ல நடிகையை இந்த திரையுலகம் இழந்திருக்கும்” என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !