பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை
மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவர்தான் அனுஸ்ரீ. மிக துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு பெயர் போன இவர் பல சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து பங்கேற்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஆலப்புழாவில் நடைபெற்ற ஒரு துணிக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகை அனுஸ்ரீ. ஏற்கனவே இந்த திறப்பு விழா தொடர்பாக அறிவிக்கப்பட்ட பரிசுப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபருக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசை அறிவித்து அனுஸ்ரீ அதை தனது கையால் வழங்குவதாக விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்படி பரிசு பெற்ற அவரின் பெயரை அறிவித்த போது அதே பெயர் கொண்ட ஒரு வயதான மனிதர் பரிசை பெறுவதற்காக மேடைக்கு ஏறி வந்தார். ஆனால் பரிசு பெற்ற நபர் அவர் இல்லை என்றும் வேறு ஒரு நபர் என்றும் தெரியவந்தது. இதனால் ஏமாற்றத்துடன் அந்த வயதான மனிதர் கீழே இறங்கி சென்றார். இந்த நிகழ்வை கண்டதும் இளகிய மனம் கொண்ட நடிகை அனுஸ்ரீ தனது கண்களில் கண்ணீரை அடக்க முடியாமல் பின்பக்கமாக திரும்பி அழ ஆரம்பித்தார்.
இதனை புரிந்து கொண்ட அந்த துணிக்கடை அதிபர் உடனடியாக சம்பந்தப்பட்ட அந்த வயதான நபருக்கும் ஆறுதல் பரிசாக ஒரு குறிப்பிட்ட தொகையை தன் கைப்படவே அளித்தார். அந்த வயதானவருக்கு பரிசு கிடைத்த பின்னரே நடிகை அனுஸ்ரீயின் முகத்தில் சந்தோசம் பிறந்தது. அதன்பிறகு பேசிய அனுஸ்ரீ, “இந்த மனிதருக்கு ஏதாவது ஒரு சிறிய தொகையை பரிசாக இன்று கொடுத்திருக்காவிட்டால் என்னால் இன்று இரவு நிம்மதியாக உறங்கி இருக்க முடியாது” என்று நெகிழ்வுடன் கூறினார். இந்த நிகழ்வு அங்கே கூடியிருந்த பார்வையாளர்களையும் மனம் நெகிழ செய்தது.