பிளாஷ்பேக் : பெரும் வரவேற்பை பெற்ற முக்கோண காதல் கதை
தமிழ் சினிமாவில் முக்கோண காதல் கதை ஒன்றும் புதிதல்ல. விதவிதமான முக்கோண காதல் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால் இவற்றுக்கெல்லாம் தொடக்கமாக முற்றிலும் புதுமையாக வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் 'குங்குமச்சிமிழ்'. பஞ்சு அருணாசலம் கதை, திரைக்கதை, வசனம் எழுத ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய படம்.
மோகன், இளவரசி, ரேவதி, சந்திரசேகர், வி.கோபால கிருஷ்ணன், டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ராஜராஜன் ஒளிப்பதிவு செய்திருந்தார், இளையராஜா இசை அமைத்திருந்தார். கோவையில் இருந்து வேலை தேடி சென்னைக்கு வரும் மோகன் பஸ்சில் பயணம் செய்யும்போது அதே பஸ்சில் ஓடி வந்து ஏறுகிறார் இளவரசி. யாரோ சிலர் துரத்த அவர்களிடமிருந்து தப்பிக்க பஸ்சில் ஏறி இருக்கிறார். டிக்கெட் எடுக்க அவரிடம் பணம் இல்லை. மோகன் உதவுகிறார். இதுவே அவர்களுக்குள் நட்பாகிறது.
அவருக்கும் சில பிரச்னைகள் இருக்கிறது. இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்கிறார்கள் முடியவில்லை. இதனால் யாரும் யாருக்கும் பாரமாக இருக்க வேண்டாம் என்று இளவரசி விலகி கொள்கிறார்.
மோகன் ஒரு முறை பஸ்சில் பயணிக்கும்போது யாரோ தவறவிட்ட 10 ஆயிரம் ரூபாயை பஸ்சில் கண்டெடுத்து அதன் மூலம் வாழ்க்கையில் உயர்கிறார். அந்த பணம் ரேவதியுடையது. அந்த பணம் தொலைந்ததால் அவரது திருமணமே நின்று விட்டதை அறிகிறார். இதனால் அவர் ரேவதியை திருமணம் செய்ய முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்யும்போது மீண்டும் இளவரசி வருகிறார். இதன் பிறகு மோகன் என்ன முடிவெடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இளையராஜா படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். 'கூட்ஸ் வண்டியிலே...', 'நிலவு தூங்கும் நேரம்', 'கை வலிக்குது கை வலிக்குது மாமா', 'பூங்காற்றே தீண்டாதே...' என்று எல்லாப் பாடல்களும் ஹிட்டானது.
படம் வெளியாகி இது 40வது ஆண்டு. இதே ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியானது.