ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார்
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‛மஞ்சும்மேல் பாய்ஸ்'. இந்த படத்தில் பத்துக்கும் மேற்பட்ட நண்பர்கள் கூட்டமாக பல நடிகர்கள் நடித்திருந்தாலும் குணா குகைக்குள் தவறி விழும் நடிகராக நடித்திருந்த ஸ்ரீநாத் பாஷியும் தன் உயிரை பணயம் வைத்து அந்த குழிக்குள் இறங்கி அவரை காப்பாற்றுபவராக நடித்த சவ்பின் சாஹிரும் தான் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனம் பெற்றார்கள். அந்த வகையில் சவ்பின் சாஹிர் மிகப்பெரிய உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். ஸ்ரீநாத் பாஷிக்கும் பல படங்கள் ஒப்பந்தமாகி வருகின்றன.
அந்த வகையில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛பொங்கலா'. இந்த படத்தை ஏபி பினில் என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முக்கியமான சில காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி படக்குழுவிற்கு அதிர்ச்சி அளித்தது. படம் வெளியாக இன்னும் கொஞ்ச நாட்களே இருக்கும் நிலையில் இப்படி பட காட்சிகள் வெளியானதை தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் இயக்குனர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய பைசல் ஷா என்பவர் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர்தான் படப்பிடிப்பு சமயத்தில் தனது மொபைல் போனில் சில காட்சிகளை பதிவு செய்து வெளியிட்டிருக்கலாம் என்றும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.