ரூ.151 கோடியைக் கடந்த 'கூலி' முதல்நாள் வசூல் : லியோ சாதனை முறியடிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து, பான் இந்தியா படமாக நேற்று வெளிவந்த படம் 'கூலி'. இப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாக கொஞ்சம் மாறுபட்டு இருந்தாலும் தியேட்டர் வசூலில் குறை வைக்கவில்லை.
முதற்கட்டத் தகவல்படி நேற்றைய முதல் நாள் வசூலாக 160 கோடி முதல் 170 கோடி வரை வசூலித்திருக்கலாம் என தகவல் வெளியானது. ஆனால் இப்போது ரூ.151 கோடி வசூலித்து இருப்பதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தின் முதல் நாள் வசூலை விட அதிகம். லியோ படம் முதல்நாளில் ரூ.148.5 கோடி மட்டுமே வசூலித்தது. இதன்மூலம் தமிழில் முதல்நாளில் அதிக வசூலை குவித்த படமாக கூலி மாறியிருக்கிறது. மேலும் வெளிநாடுகளிலும் இப்படத்திற்கான வசூல் புதிய சாதனையைப் படைக்கும் என்று சொல்கிறார்கள்.
இந்தியாவில் 76 கோடி, வெளிநாடுகளில் 75 கோடி வசூலித்திருக்கலாம் என்கிறார்கள். இன்று, நாளை, நாளை மறுதினம் விடுமுறை நாட்கள் என்பதால் முதல் வார இறுதியில் இப்படம் 500 கோடி வசூலைக் கடக்கவும் வாய்ப்புள்ளது.