உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா?

கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா?

கூலி படத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, அமீர்கான் என 5 பெரிய ஸ்டார்கள் நடித்து இருந்தாலும், வில்லனாக நடித்த சவுபின் ஷாகிர், வில்லத்தனமான வேடத்திற்கு மாறிய ரச்சிதா ராம் நடிப்பு மட்டுமே விமர்சன ரீதியாக அதிகம் பாராட்டப்பட்டது. யார் இவர்கள். இவர்கள் பின்னணி என்ன என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கில் பல ஹிட் கொடுத்த பாசிலிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாபுவின் மகன் சவுபின் ஷாகிர். பின்னர், பாபு பல படங்களில் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்தார். சவுபின் குழந்தை நட்சத்திரமாக சில படங்களிலும் நடித்தாலும் உதவி இயக்குனராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார். பின்னர், சில மலையாள படங்களில் நடித்தார். பிரேமம் படத்தில் அவர் நடித்த பிடி வாத்தியார் வேடம் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அடுத்து, சார்லி, மகேசிண்டே பிரதிகாரம், கும்பளங்கி நைட்ஸ், டிரான்ஸ் படங்களில் அவர் நடிப்பு பேசப்பட்டது. மஞ்சும்மல்பாய்ஸ் படத்தை தயாரித்து, அவரே குட்டன் ரோலில் நடிக்க, உலக அளவில் அவருக்கு அந்த படம் பெயர் வாங்கிக் கொடுத்தது.

தமிழ் ரசிகர்களுக்கும் சவுபின் ஷாகிர் நன்கு பரீட்சயம் ஆனார். தமிழகத்திற்கு அழைத்து அவருக்கு விருதுகள் கொடுத்தார்கள். அவரை கல்லுாரி நிகழ்ச்சிகளுக்கு அழைக்க ஆரம்பித்தார்கள். அந்த வகையியில் கூலியில் வில்லனாக கமிட்டார். மோனிகா பாடலில் அவர் போட்ட ஆட்டம், கூலியில் அவர் நடிப்பும் சவுபினுக்கு தனியிடத்தை பெற்றுக் கொடுத்தனர். கூலி முதல்நாள், முதல் ஷோவை அவர் சென்னையில்தான் ரசிகர்களுடன்
பார்த்து ரசித்து இருக்கிறார்.

கன்னட நடிகை ரச்சிதா ராம், சிறந்த பரதநாட்டிய கலைஞரும் கூட. கன்னடத்தில் சுதீப், தர்ஷன், துருவா, சிவராஜ் குமார், ரமேஷ் அரவிந்த படங்களில் நடித்தார். கன்னடத்தில் ரச்சிதா ராமுக்கு தனி மவுசு உண்டு. பல படங்களில் ஹீரோயினாக, சிறப்பு தோற்றத்தில் நடித்தவரை முதலில் வில்லியாக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அவரின் மாறுபட்ட கேரக்டர், நடிப்புக்கு ஏகப்பட்ட பாராட்டுகள். ரச்சிதாராமின் சகோதரி தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்தவர், அவர் வேறு யாருமல்ல. அவள், நந்தினி, லட்சுமி ஸ்டோர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த நித்யா ராம். தென்னிந்தியாவில் முன்னணி சீரியல் நடிகை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !