தொடர்ந்து ஆர்வத்தை தூண்டும் மம்முட்டியின் ‛கலம்காவல்' பட போஸ்டர்கள்
மம்முட்டி நடிப்பில் அடுத்ததாக ரிலீஸுக்கு தயாராகி வரும் படம் ‛கலம்காவல்'. மம்முட்டியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தான் இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஆச்சரியமாக இந்த படத்தில் மம்முட்டி வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்கு நேர்மாறாக வில்லன் நடிகரான விநாயகன் ஒரு நேர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே ரசிகர்களிடம் உருவாகிவிட்டது.
அது மட்டுமல்ல துவக்கத்தில் இருந்தே அவ்வப்போது இந்த படத்திற்காக வெளியாகி வரும் போஸ்டர்களில் இடம்பெற்றுள்ள மம்முட்டியின் கெட்டப் படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் என்பவர் இயக்கி வருகிறார். இவர் துல்கர் சல்மான் நடித்த ‛குறூப்' படத்திற்கு கதை எழுதியவர். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.