மோதிரக் கையால் குட்டுப்பட்டு கதாநாயகியாக அறிமுகமாகும் மகேஷ்பாபுவின் சகோதரர் மகள்
பிரபல நட்சத்திர குடும்பங்களின் வாரிசுகள் அவ்வப்போது சினிமாவில் ஹீரோ, ஹீரோயினாக தொடர்ந்து அறிமுகம் ஆகி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் மகேஷ்பாபுவின் குடும்பத்திலிருந்து தெலுங்கு சினிமாவில் ஒரு புதிய வரவாக களமிறங்குகிறார் பாரதி கட்டமனேனி. இவர் மகேஷ்பாபுவின் மறைந்த சகோதரர் ரமேஷ் பாபுவின் மகள் ஆவார். தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனரும் நடிகைகள் ரீமாசென், காஜல் அகர்வால், சதா உள்ளிட்டவர்களை தெலுங்கு திரையுலகில் அறிமுகப்படுத்தியவருமான இயக்குனர் தேஜா தன்னுடைய புதிய படத்தில் இவரை அறிமுகப்படுத்த இருக்கிறார்.
தனது படத்திற்காக ஒரு குடும்பப் பாங்கான அதேசமயம் புதியவராக ஒருவரை அறிமுகப்படுத்த நினைத்தபோதுதான், மகேஷ்பாபு ஸ்ரீ லீலாவின் ‛குர்ச்சி மர்த்தபெட்டி' என்கிற பாடலுக்கு பாரதி இன்ஸ்டாகிராமில் நடனமாடி வெளியிட்டிருந்த வீடியோ தேஜாவின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து பாரதிக்கான ஆடிசன், லுக் டெஸ்ட் அனைத்தும் நல்லபடியாக முடிவடைந்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.